அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் .
Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District [TM009760]
×
Temple History
தல வரலாறு
தல வரலாறு
பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அருள்மிகு பட்டீசுவரசுவாமி, இறைவி அருள்மிகு பச்சைநாயகியார் இறைவன் தன்னை வேண்டி தவம்புரிந்த காமதேனுவிற்கு காட்சியளித்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி முக்தி அளித்ததால் பிறவா நெறித்தலம் என்ற பெயர் பெற்றது. திருப்பேரூர் கொங்குநாட்டு வைப்புத் தலங்களுள்ளே பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இது பண்டைக்காலத்தில் அரசவனமாக இருந்தது. இவ்வனத்தில் பெருமானார் புற்றுக்களால் சூழப்பெற்றிருந்தார். படைப்பு தொழிலைச் செய்யும் ஆற்றலைப் பெறவிழைந்த காமதேனு இங்கு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் தனது கன்றின்...தல வரலாறு
பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அருள்மிகு பட்டீசுவரசுவாமி, இறைவி அருள்மிகு பச்சைநாயகியார் இறைவன் தன்னை வேண்டி தவம்புரிந்த காமதேனுவிற்கு காட்சியளித்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி முக்தி அளித்ததால் பிறவா நெறித்தலம் என்ற பெயர் பெற்றது. திருப்பேரூர் கொங்குநாட்டு வைப்புத் தலங்களுள்ளே பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இது பண்டைக்காலத்தில் அரசவனமாக இருந்தது. இவ்வனத்தில் பெருமானார் புற்றுக்களால் சூழப்பெற்றிருந்தார். படைப்பு தொழிலைச் செய்யும் ஆற்றலைப் பெறவிழைந்த காமதேனு இங்கு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் தனது கன்றின் கால் புற்றின் உள்ளே அகப்பட்டுக் கொள்ள, அதை எடுப்பதற்காக தன் கொம்புகளால் புற்றைக் குத்தி களைந்தெடுத்த போது கன்றின் கால் சுவடும், தனது கொம்பின் சுவடும் லிங்க ரூபமாக இருந்த இறைவனின் திருமேனியில் பட்டு இரத்தம் வரக்கண்டு வருந்திற்று, இறைவன் அச்சுவடுகளைத் தமக்கு அடையாளமாக விரும்பி ஏற்றுக் கொள்வதாகக் கூறி, காமதேனுவின் விருப்பத்தை கருவூரிலே முற்றுவிக்கச் செய்வதாக அருளினார். காமதேனு தங்கி வழிபட்டதால் திருவான்பட்டியுடையார் என்ற திருப்பெயரோடு, இறைவன் இங்கே வழிபடும் ஆன்மாக்கட்கு முக்தியின்பத்தை அருள் செய்து விளங்குகிறார். இன்றும் இவ்வடையாளங்கள் திருமேனியில் காணப்படுகின்றன.
புராதனமான இக்கருவறை கரிகாலசோழரால் அமைக்கப்பெற்றது. இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, அதிமூர்க்கம்மன் (காளி), காலவமுனிவர் ஆகியோரின் தவத்திற்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆனந்த திருநடனம் ஆடி காட்சி கொடுத்தது பங்குனி உத்திரத் திருநாள் ஆகும். மூர்த்தி இங்கு அருள்மிகு பட்டீசுவரர் தானே தோன்றி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். சிவலிங்கம் சதுர வடிவில் அமைந்து ஆவுடையாருடன் கூடியதாக கொண்டது. இத்திருமேனியில் இறைவன் எழுந்தருளி காமதேனுவிற்கு அருள்பாலித்துள்ளார். இது மாடு அடைக்கும் பட்டியாக இருந்தது. கொங்கு நாட்டில் மாட்டு கொட்டகை என்பதை பட்டி என அழைப்பர். எனவே பட்டீசுவரர் எனும் சிறப்பு பெயர் பெற்றார். தலம் இத்தலம் பல சிறப்பு பெயர்கள் பெற்றதாக உள்ளது. அவை 1) ஆதிபுரி, 2) பட்டிபுரி, 3) தேனுபுரம், 4) தவசித்திபுரம், 5) பிப்பிலாரண்யம், 6) மேலைச்சிதம்பரம், 7) மேலைசிவபுரி, 8) தட்சிணகாசி, 9) பிறவாநெறித்தலம், 10)பத்திபுரம், 11) ஞானபுரம், 12)வன்னீகபுரம், 13) மேருபுரம், 14)பசுபதிபுரம், 15) குருஷேத்திரம், 16) தற்காலம் பேரூர் என அழைக்கப்படுகிறது.
தீர்த்தம்
இங்கு விளங்கக்கூடிய தீர்த்தங்கள் 1) சிருங்கத் தீர்த்தம், 2) பிரம்ம தீர்த்தம், 3) சக்கர தீர்த்தம், 4) குண்டிகை தீர்த்தம், 5) காஞ்சிமாநதி, ஆகியவையாகும். தல புராணம் இத்தலபுராணம் வடமொழியில் ஆதிபுரி மகாத்மியம் எனும் பெயரால் அழைக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதினத்தை சேர்ந்த கச்சியப்ப முனிவர் என்பவரால் இத்தல புராணத்தை பேரூர் புராணம் என்னும் திருப்பெயரால் எழுதியுள்ளார். இப்புராணம் 36 படலங்களுடன் இறைவனின் திருவிளையாடல்கள் விளக்குகின்றது.
இத்திருக்கோயிலின் உபகோயில்கள் விவரம்
1.அருள்மிகு பட்டிவிநாயகர் திருக்கோயில்
2.அருள்மிகு அரசம்பலவாணர் திருக்கோயில்
3.அருள்மிகு வடகைலாயநாதர் திருக்கோயில்
4.அருள்மிகு தென்கைலாயநாதர் திருக்கோயில்
5.அருள்மிகு அழகிய சிற்றம்பலநாதர் திருக்கோயில்
6.அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில்
7.அருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில்
8.அருள்மிகு ஆற்று விநாயகர் திருக்கோயில்
9.அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்
10.அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயில்
11.அருள்மிகு காட்டுப்பெருமான் திருக்கோயில்
12.அருள்மிகு அதிமூர்க்கம்மன் திருக்கோயில்
13.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
14.அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்.
திருக்கோயில் வரலாற்று சிறப்புகள்
திருக்கோயிலின் கற்பகிரகம் கரிகாற்சோழன் மன்னரால் கட்டப்பட்டுள்ளது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சுவாமிகள் இத்தலத்தில் எழுந்தருளி இறைவனை தரிசனம் செய்துள்ளார் என்பதை அவரால் அருளப்பெற்ற தேவராத்தில் காண முடிகிறது. எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் பேரூரில் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டியுள்ளார். 11 மற்றும்
13-ம் நூற்றாண்டுகளில் (கொங்கு சோழர் காலம்) அர்த்த மண்டபம், மகா மண்டபம், இரண்டும் கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகிறது. 14 மற்றும் 15-ம் நூற்றாண்டுகளில் ஒய்சாலர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளனர். 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களும் மதுரை நாயக்கர் வம்சத்தை சார்ந்த அழகாத்ரி நாயக்கர் சிற்ப சிறப்புகள் வாய்ந்த கனகசபை எனும் மண்டபத்தை கட்டியுள்ளார்.
1792-ம் ஆண்டுகளில் மைசூரை ஆண்ட திப்புசுல்தான் பேரூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பின் பகுதி நிலங்களை தாம் பிடித்துக் கொண்டு மிகுதியை கோயிலுக்கு கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. 1799-ம் ஆண்டு ஆங்கிலேயர் திப்புவை தோற்கடித்து பேரூரை தம் வசப்படுத்தி கிராமம் முழுவதையும் கோயிலுக்கு பட்டா ஆக்கியுள்ளனர். சுவாமி மற்றும் அம்மன் திருக்கோயில்கள் 18-ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் மண்டபம் இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. திருக்கல்யாண மண்டபம் மற்றும் முன்மண்டபம் ஆகியவை 1940 ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.
தொல்பொருள் அகழ்வாரய்ச்சியில் பேரூர் ஆற்றங்கரையிலே ரோமானிய காசுகளும் மற்றும் பாண்டவர் குழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலக்கிய சிறப்பு இப்பழமை வாய்ந்த திருத்தலம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சோழன் பூர்வ பட்டயம் எனும் செப்பேடுகள் கோயிலில் பழமையை காட்டுகிறது. சைவ சமயத்தின் முக்கிய பாடல்களான தேவாரம், திருவாசம், ஆகியவற்றிலும், சுந்தரர் வரலாற்றிலும், பேரூரை பற்றிய செய்திகள் காணப்படுகிறது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் சிறப்பு வாய்ந்தது. கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட பேரூர் புராணம் இலக்கிய சிறப்பும், சைவ சித்தாந்த சிறப்பும் வாய்ந்ததாகும்.